ஷா ஆலம், ஜூலை 22- இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் கோவிட்-19 தடுப்பு மருந்து விற்பனையை கும்பல் ஒன்று தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி 54,500 வெள்ளியை மோசடி செய்துள்ளது.
தங்களை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட இம்மோசடிக் கும்பலிடம் ஏமாந்து பணத்தை பறிகொடுத்த 38 பேர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இணையம் வாயிலாக கோவிட்-19 மருந்துகளை விற்பனை செய்யும் தரப்பினரை குறி வைத்து இக்கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.
தாங்கள் குறிவைத்த நபர்களைக் தொலைபேசி வழி தொடர்பு கொள்ளும் இக்கும்பல் உறுப்பினர்கள் முகநூல் வாயிலாக கோவிட்-19 தடுப்பு மருந்து விற்பனை செய்யும் குற்றத்திற்காக உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என அச்சுறுத்துவர் என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் பயத்திலும் குழப்பத்திலும் அக்கும்பலின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கேட்கும் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி விடுவர் என்று டத்தோ கமாருடின் தெரிவித்தார்.
இதனிடையே, கோவிட்-19 தடுப்பு மருந்து விற்பனை மோசடி தொடர்பில் போலீசார் நான்கு புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இப்புகார்கள் தொடர்பில் எண்மர் கைது செய்யப்பட்டு விசாரணை முடியும் வரை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


