ஷா ஆலம், ஜூலை 21- கிராப் எனப்படும் மின் வாடகைக் காரை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வோருக்கு வழங்கப்படும் 20 வெள்ளி கட்டணக் கழிவுக்கான விண்ணப்பாரங்களின் உள்ளடக்கத்தில் மாற்றங்களைச் செய்ய எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் உத்தேசித்துள்ளது.
தடுப்பூசி பெறுதவதற்கான தேதி இன்னும் கிடைக்கப்பெறாதவர்கள் வரும் ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு (பி.பி.வி.) நேரில் செல்லலாம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பின் எதிரொலியாக இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்று அக்கழகத்தின் வர்த்தக சமூக கடப்பாட்டு பிரிவு அதிகாரி அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைக்கப் பெறாதவர்களும் அந்த கட்டணக் கழிவுக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக விண்ணப்பாரத்தில் திருத்தங்களை செய்வது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த கட்டணக் கழிவு பற்றுச் சீட்டுகள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானதாகும் என்று அவர் கூறினார்.
இந்த கட்டணக் கழிவை விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக வழங்கி விட முடியாது. காரணம், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.
இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பி.பி.வி. மையங்களுக்கு செல்ல கிராப் வாகன சேவையைப் பயன்படுத்துவோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கடந்த மாதம் 20 ஆம் தேதி அறிவித்தது.


