ஷா ஆலம், ஜூலை 22- பார்மாநியாகா பெர்ஹாட் நிறுவனம் 1 கோடியே 40 லட்சம் சினோவேக் தடுப்பூசிகளை விற்பனை செய்யவுள்ளது. ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் இந்த தடுப்பூசியை இம்மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் வாங்கலாம்.
இந்த தடுப்பூசிகளை ஆர்வமுள்ள தரப்பினரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தவாத பணிக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இந்நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த இயலும் என்று அவர் சொன்னார்.
தடுப்பூசியை நேரடியாக வாங்குவதற்கு சில மாநிலங்கள் ஆர்வம் காட்டின. உதாரணத்திற்கு சிலாங்கூர் மாநிலம் தடுப்பூசியை நேரடியாக விற்கும்படி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் கோவிட்-19 பணிக்குழுவும் தடுப்பூசி விநியோகம் தொடர்பில் அட்டவணையைக் கொண்டுள்ளதால் அவ்வாறு செய்ய இயலாமல் போனது என்று அவர் சொன்னார்.
சினோவேக் தடுப்பூசியின் இறுதிக் கையிருப்பை பார்மாநியாகா நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பர்மாநியாகா நிறுவனம் ஒப்பந்த காலத்திற்கு நான்கரை மாதங்களுக்கு முன்னதாகவே ஒரு கோடியே 20 லட்சம் சினோவேக் தடுப்பூசிகளை வெற்றிகரமாக விநியோகம் செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


