கோலாலம்பூர், ஜூலை 22- மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான சைட் சாடிக் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்ப்பட்டது.
அரசியல் கட்சி ஒன்றுக்கு சொந்தமான பத்து லட்சம் வெள்ளியையும் 14வது பொதுத் தேர்தல் பிரசாரத்திற்கு வழங்கப்பட்ட 120,000 வெள்ளியையும் கையாடல் செய்ததாக சைட் சாடிக் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் தனித்தனியாக சுமத்தப்பட்ட இவ்விரு குற்றச்சாட்டுகளையும் 29 வயதான சைட் சாடிக் மறுத்து விசாரணை கோரினார்.
பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தின் அனுமதியின்றி சி.ஐ.எம்.பி. வங்கியின் காசோலை மூலம் 10 லட்சம் வெள்ளியை மீட்டதன் வழி அக்கட்சியின் இளைஞர் பிரிவுக்கு (அர்மாடா) சொந்தமான பணத்தை பாதுகாப்பதற்கு வழங்கப்பட்ட பொறுப்பை கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் என்ற முறையில சைட் சாடிக் மீறி விட்டதாக முதலாவது குற்றசாட்டில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 405 வது பிரிவு மற்றும் அதே சட்டப் பிரிவின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் 406வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அர்மாடா எண்டர்பிரைஸ் எனும் நிறுவனத்தின் வாயிலாக வசூலிக்கப்பட்ட 120,000 வெள்ளி தேர்தல் நிதியை மேபேங்க் இஸ்லாமிக் வங்கியின் பண்டான் ஜெயா கிளையிலிருந்து கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 21 ஆம் தேதி வரை மீட்டதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றசாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தின் சார்பில் டத்தோ பாரிட்ஸ் கோஹிம் அப்துல்லா, முகமது அஸ்ராப் முகமது தாஹிர் மற்றும் முகமது அலிப் அலி ஆகியோர் இவ்வழக்கை நடத்தும் வேளையில் சைட் சாடிக்கை பிரதிநிதித்து கோபிந்த் சிங் டியோ மற்றும் டத்தோ எஸ். அம்பிகா ஆகியோர் ஆஜராகின்றனர்.


