ஷா ஆலம், 22- சிறிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் மையம் ஒன்று பூச்சோங் இண்டா எம்.பி.எஸ்.ஜே. பல்நோக்கு மண்டபத்தில் திங்கள் கிழமை முதல் செயல்படும்.
சுற்றுவட்டார மக்கள் தடுப்பூசியை விரைந்து பெறுவதற்கு இந்த புதிய தடுப்பூசி மையம் பெரிதும் துணை புரியும் என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
பல சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பூச்சோங் இண்டாவிலுள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற பல்நோக்கு மண்டபத்தில் தடுப்பூசி மையம் செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்துவதற்காக பூச்சோங்கில் சிறிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் மையம் திறக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கடந்த மாதம் 25ஆம் தேதி கூறியிருந்தார்.
தங்களின் குடியிருப்புகளுக்கு வெகு தொலைவில் தடுப்பூசி மையங்கள் உள்ளதால் பல முதியோர் தடுப்பூசி செலுத்துவதற்கு குறிப்பிட்ட தேதியில் வரத் தவறுவதாக அவர் தெரிவித்தார்.
இம்மாத இறுதிவாக்கில் தினசரி 300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த சிலாங்கூர் மாநில அரசு இலக்கு வகுத்துள்ளது.


