கோலாலம்பூர், ஜூலை 22- நாட்டில் தற்போதைக்கு வெப்ப அலை ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை. எனினும், தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக செப்டம்பர் மாத மத்தி வரை வறட்சி மற்றும் வெப்பம் நிறைந்த வானிலை காணப்படும் என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
நாட்டில் அனல் காற்று வீசுவதற்கான சாத்தியம் உள்பட அனைத்து சூழ்நிலைகள் மீதும் தனது தரப்பு அணுக்கமான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அத்துறை அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் அமலாக்கத் தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக தகவல்களை விரைந்து தெரிவிக்க இக்கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என அத்துறை தெரிவித்தது.
இம்மாதம் 21 ஆம் தேதி வரை அனல் காற்று மீது வானிலை ஆய்வுத் துறை மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் எந்த பகுதியும் வெப்ப அலையின் தாக்குதலுக்கு இலக்காகவில்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் அது குறிப்பிட்டது.
கடந்த மூன்று தினங்களாக நாட்டின் உஷ்ண நிலை 35 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை என்பது வானிலை ஆய்வுத் துறையின் மூன்று மையங்களில் பதிவான தரவுகள் காட்டுகின்றன. ஆகவே, உஷ்ண நிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டுவதற்கான சாத்தியம் குறைவு என்றும் அத்துறை கருதுகிறது.


