ஷா ஆலம், ஜூலை 22- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் அதிகரிப்புக்கும் மரண எண்ணிக்கை உயர்வுக்கும் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குற்றஞ்சாட்டினார்.
தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் மற்றவர்களின் கருத்தை புறந்தள்ளிய ஆணவப் போக்கினால் இத்தகைய பிரச்னைகள் எழுந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி பெறுவோரின் தற்போதைய எண்ணிக்கை மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தாலும் இவ்விகாரத்தில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் தாமதமாகத்தான் செயல்பட்டுள்ளோம். இலக்கை அடைவதற்கு இப்போதுதான் பரபரப்பாக செயல்படுகிறோம் என்றார் அவர்.
தொடக்கம் முதல் நாங்கள் பல பரிந்துரைகளை முன்வைத்தோம். குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு தடுப்பூசி செலுத்த தனியார் கிளினிக்குகளையும் அனுமதி வேண்டும் என்றோம். நாங்கள் பரிந்துரைத்து பல மாதங்கள் ஆனப் பின்னர் இப்போதுதான அவற்றை அமல்படுத்துகின்றனர் தனது முகநூல் வாயிலாக வெளியிட்ட காணொளியில் அவர் சொன்னார்.
அமைச்சர்களின் முரண்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 18 ஆம் தேதி கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை சந்தையைப் போல் நெரிசல்மிக்கதாக ஆனது. மருத்துவப் பணியாளர்கள் கடுமையாகப் பாடுபடுகின்றனர். பிறகு, இப்பிரச்னைக்கு யாரை குறை சொல்வது?
பிரேத வாகனங்களின் ஊர்வலத்தை கண்ணால் காண்கிறோம். அவசரகால நிலை அளவுக்கு பிரச்னை கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் காணப்பட்ட அலட்சியப் போக்கு, மந்தப்போக்கு மற்றும் ஒரு தலைப்பட்சமான சட்ட அமலாக்கம் ஆகியவையே இந்த அவல நிலக்கு காரணம் என்று அன்வார் குறிப்பிட்டார்.


