ஷா ஆலம், ஜூலை 22- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு பகுதிகளில் அடுத்த வாரம் தொடங்கி தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படும்.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டப் பின்னர் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பி.கே.பி.டி. பகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், அப்பகுதி மக்களில் ஒரு பகுதியினருக்கு பி.கே.பி.டி. அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது. அடுத்த மூன்று தினங்களில் கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.
நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கோம்பாக் டேவான் ஸ்ரீ சியாந்தானில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
கோம்பாக், தாமான் சமுட்ரா, டாமன்சாரா டாமாய் அடுக்கமாடி குடியிருப்பு, ஜாலான் பாண்டான் இண்டா, கிள்ளான் பண்டார் புக்கிட் திங்கி ஆகிய இடங்களில் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.


