ஷா ஆலம், ஜூலை 21- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) பிறப்பிக்கபட்ட கோம்பாக், தாமான் சமுத்ரா தீமோர் அடுக்குமாடி பகுதியில் வசிக்கும் 400 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 119 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது அச்சோதனையில் கண்டறியப்பட்டதாக கோம்பாக் மாவட்ட அதிகாரி சுக்ரி முகமது ஹமின் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் தொடர் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் செர்டாங் 2.0 பி.கே.ஆர்.சி. மையத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் எஞ்சிய 93 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக சுகாதார மையத்தில் உள்ள பணியாளர்கள் அவர்களின் உடல் நிலையை அவ்வப்போது சோதனை செய்வர் என்றார் அவர்.
இதுவரை அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்ட 400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நோய்த் தொற்று உள்ள அந்த 119 பேரும் அடையாளம் காணப்பட்ட வேளையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 104 பேரிடம் தாங்கள் விரைவில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நோய்த் தொற்று இல்லாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் திங்கள் கிழமை முதல் மேற்கொள்ளப்படும் என்றும் அதே சமயம் கோவிட்-19 பரிசோதனை இயக்கமும் தொடரப்படும் என்றும் அவர் சொன்னார்.


