கோம்பாக் ஜூலை 21- கோம்பாக் செத்தியா மற்றும் சுங்கை துவா தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,600 பேர் இன்று தொடங்கி தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இங்குள்ள ஸ்ரீ சியான்தான் மண்டபத்தில் பெறுவர்.
சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இன்று தொடங்கி வரும் வெள்ளிக் கிழமை வரை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதலாவது டோஸ் தடுப்பூசியை தொடக்கத்திலேயே பெற்றவர்களில் இவ்விரு பகுதிகளையும் சேர்ந்தவர்களும் அடங்குவர். அவர்களில் 1,600 பேர் இன்று தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர் என்றார் அவர்.
இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தடுப்பூசி இயக்கம் சுமூகமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி பெற வந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க நாற்காலி வசதியுடன் தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
செல்கேர் ஹெல்த்கேர் நிறுவனத்தால் நடத்தப்படும் இத்திட்டம் வரும் 26 ஆம் தேதிக்குப் பிறகு மேலும் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இதன் வழி நோய்த் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் இலக்கை அடைய முடியும் என்றார்.


