ஷா ஆலம், ஜூலை 21- இங்கு நேற்று நடைபெற்ற 2020 சிலாங்கூர் மலாய் இலக்கியப் படைப்புக்கான போட்டியில் மண்ணின் மணம் கமழும் வகையில் படைப்புகளை வெளியிட்ட 11 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த இலக்கியப் போட்டியில் சிறுகதைக்கான பிரிவில் நால்வரும் கட்டுரைப் பிரிவில் நால்வரும் கவிதைப் பிரிவில் மூவரும் வெற்றி பெற்றனர். எனினும், ஒட்டுமொத்தப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதான வெற்றியாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை.
இப்போட்டியில் Jargon:ketidakjujuran bahasa எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்காக ஜெயமணி சிவநாதன் அப்பிரிவில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியின் ஒரே இந்திய வெற்றியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேனியல் காடீர், சைபுல் கசாலி, முகமது நஸ்ரின் சாகூல் ஹமிது ஆகியோர் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற இதரப் போட்டியாளர்கள் ஆவர்.
சிறுகதைப் பிரிவில் பராஹின் டபள்யு, முகமது பாரிக் கீர், ஜெயா ரம்பா, சைபுல் கசாலி ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பெற்றனர்.
கவிதைப் போட்டியில் ஜெட் ஸ்டெல்லாரோஸ், ஜொக் மாலிக், சித்தி ஹலிமா ஆகியோர் பரிசு பெற்றனர்.
இந்த இலக்கியப் போட்டி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2015ஆம் ஆண்டில் கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது தொடக்கப்பட்டது.
சிலாங்கூர் கினி பத்திரிகையில் பிரசுரமான இந்த படைப்புகள் யாவும் சுயேச்சை நடுவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


