கோலாலம்பூர், ஜூலை 21- கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சினோவேக் மற்றும் ஃபைசர் ஆகிய தடுப்பூசிகள் சமமான அளவு ஆக்கத் தன்மையைக் கொண்டுள்ளதை மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை தடுப்பூசி பெற்ற 42 லட்சம் பேர் மற்றும் தடுப்பூசி பெறாத 55 லட்சம் பேரை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சினோவேக் தடுப்பூசியின் பயன் குறித்து நியு இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசன் சஞ்சிகை வெளியிட்ட ஆய்வை அவர் சுட்டிக் காட்டினார்.
சினோவேக் தடுப்பூசி கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை 65.9 விழுக்காடும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை 87.5 விழுக்காடும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையை 90.3 விழுக்காடும் மரண விகிதத்தை 86.3 விழுக்காடும் குறைக்க உதவியதாக அந்த ஆய்வு கூறுகிறது என்று அவர் சொன்னார்.
சுமார் 95 விழுக்காடு ஆக்கத் தன்மை கொண்டதாக கூறப்படும் ஃபைசர் தடுப்பூசி தொடர்பில் மிகவும் குறைவான அதாவது 170 பேரை மட்டுமே கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 162 பேர் தடுப்பூசி பெறாதவர்கள் மற்றும் எண்மர் தடுப்பூசி பெற்றவர்களாவர்.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஃபைசர் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளின் பயன்பாட்டில் அதிக வேறுபாடு காணப்படவில்லை என்று நோர் ஹிஷாம் தெரிவித்தார்.


