ஷா ஆலம், ஜூலை 21- செல்வேஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறத் தகுதியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை இறுதி செய்யும் பணியில் சுங்கை பீலேக் தொகுதி ஈடுபட்டுள்ளது.
தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 2,600 தடுப்பூசிகளை வழங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொகுதி உறுப்பினர் ரோனி லியு தியான் கியாவ் கூறினார்.
தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவே உள்ளதால் இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு சுகாதார அமைச்சின் வாயிலாக தடுப்பூசி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
ஹோட்டல் மோவென்பிக் மற்றும் கே.எல்.ஐ.ஏ. மாநாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி மையப் பணியாளர்களுக்கு ஹாஜ்ஜூப் பெருநாள் பலகாரங்களை விநியோகித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பூசிக்கான தேவை அதிகம் உள்ளதால் தமது தொகுதி வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி தாம் மாநில அரசைக் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 25 லட்சம் தடுப்பூசிகளை மாநில அரசு பொது மக்கள் மற்றும் தொழில் துறையிருக்கு விநியோகித்து வருகிறது. இவற்றில் பொதுமக்களுக்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளும் தொழில்துறையினருக்கு 20 லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படும்.


