ஷா ஆலம், ஜூலை 21- சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை சுமார் 700,000 பேர் அதாவது 14.75 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 28 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும் 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் அல்லது 45.1 விழுக்காட்டினர் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தவிர, சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 79,657 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இம்மாத இறுதிக்குள் மாநிலத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை தினசரி 300,000 ஆக உயரும் என்று மந்திரி புசார் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
மத்திய அரசின் பிக் தடுப்பூசித் திட்டம், மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டம் மற்றும் அரசாங்க-தனியார் துறை ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பிக்காஸ் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக இந்த இலக்கை எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொழில் துறையைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்ட செல்வேக்ஸ் திட்டத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகளையும் பொது மக்களை இலக்காக் கொண்ட செல்வேக்ஸ் திட்டத்திற்கு ஐந்து லட்சம் தடுப்பூசிகளையும் மாநில அரசு ஒதுக்கியுள்ளது.


