ECONOMY

சிலாங்கூரில் மேலும் இரு பி.கே.பி.டி. பகுதிகளில் தடுப்பூசி இயக்கம்

20 ஜூலை 2021, 1:16 PM
சிலாங்கூரில் மேலும் இரு பி.கே.பி.டி. பகுதிகளில் தடுப்பூசி இயக்கம்

ஷா ஆலம், ஜூலை 20- சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல் படுத்தப்பட்ட மேலும் இரு பகுதிகளில்  தடுப்பூசி செலுத்தும் இயக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

டாமன்சாராவிலுள்ள  டாமாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அம்பாங், ஜாலான் பண்டான் இண்டா ஆகியவையே அவ்விரு பகுதிகளாகும். 

டாமாய் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 2,600 குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை இயக்கம்  இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படும் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

இந்த சோதனையில் கோவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்பு இல்லாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். புதன்  மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 சோதனையின் முடிவுகள் கிடைத்தவுடன் வெள்ளிக் கிழமை தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.

இதனிடையே,  ஜாலான் பண்டான் இண்டாவிலுள்ள 1,400 குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் பணி நேற்று முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுவதாக உலு லங்காட் மாவட்ட அதிகாரி நஜ்முடின் ஜெமாய்ன் தெரிவித்தார்.

நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட அனைவருக்கும் பி.கே.பி.டி. முடிவுக்கு வரும் தினத்தன்று தடுப்பூசி செலுத்தப்படும். இது தவிர, 430 வீடுகளை உள்ளடக்கிய மூன்று புளோக் குடியிருப்பாளர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கும் பணியும்  நேற்று மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

இவ்விரு பகுதிகள் உள்பட சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு இடங்களில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு  ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.