ஷா ஆலம், ஜூலை 20- இருபத்து மூன்றாம் நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் ( 4 மற்றும் 5 ஆம் நிலை) பாதிக்கப்பட்ட முதியோர் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதை சுங்கை பூலோ மருத்துவமனையின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கத்திற்கு ஏற்ப இந்த நோயாளிகள் எண்ணிக்கை குறைவு அமைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பலன் 22 ஆம் நோய்த் தொற்று வாரம் முதற்கொண்டு தெரியத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
21ஆவது நோய்த் தொற்று வாரத்தில் 217 பேராக இருந்த 60 முதல் 79 வயது வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கை 23வது வாரத்தில் 125 ஆகவும் நடப்பிலுள்ள 28வது நோய்த் தொற்று வாரத்தில் 119 ஆகவும் குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 நான்காம் நிலை நோயாளிகள் நிமோனியா எனப்படும் நுரையீல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிக்கும் நிலையிலும் இருப்பர். மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்த ஐந்தாம் நிலை நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.


