ஷா ஆலம், ஜூலை 20- மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் 39 பணியாளர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் கோவிட்-19 தடுப்பூசியை இன்று பெற்றனர். தொழில்துறையினருக்கான செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பெட்டாலிங் ஜெயா, டிரோப்பிகானா மால் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பணியாளர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் தடுப்பூசி வழங்கும் மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் நடவடிக்கையை மற்ற தரப்பினர் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று செல்கேட் ஹெல்த்கேர் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி சஸானா அய்மி கமாருடின் கூறினார்.
மீடியா சிலாங்கூர் எடுத்துள்ள இந்நடவடிக்கை சிறப்பான ஒன்று என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுவதில் தங்களுக்கு உள்ள பொறுப்புணர்வை புலப்படுத்தும் வகையிலும் உள்ளது என அவர் தெரிவித்தார்.
பணியாளர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிலும் மற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதால் இந்நடவடிக்கை அவசியமாகிறது என்றார் அவர்.
தொழில்துறையினருக்கான செல்வேக்ஸ் திட்டத்தில் பங்கேற்க இன்னும் வாய்ப்பு உள்ளதால் நிறுவனங்களின் பங்கேற்ப தாங்கள் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்ள இதுவரை ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன. கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மேலும் அதிகமான நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்க முன்வரும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.


