ஷா ஆலம், ஜூலை 20- நாட்டில் புதிய வகை நோய்த் தொற்றுகள் பரவி வரும் காரணத்தால் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் சட்டமன்றக் கூட்டத்தை ஹைப்ரிட் முறையில் நடத்த சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.
ஹைப்ரிட் எனப்படும் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான சூழல் ஏற்படும் பட்சத்தில் அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதற்கான தீர்மானத்தை தாம் முன்மொழியவிருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
ஹைப்ரிட் முறையிலான சட்டமன்றக் கூட்டம் சட்டப்பூர்வமான முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக உறுப்பினர்கள் அனைவரும் முன்னதாக அவைக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த சட்டத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் ஹைப்ரிட் முறையில் கூட்டம் நடைபெறும். கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத தடுப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
சட்டமன்றக் கூட்டத் தொடரில் நேரடியாக பங்கேற்கும் அனைவருக்கு விரைவில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற சட்டமன்றப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தை ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.


