ஷா ஆலம், ஜூலை 20- கெடா, சிலாங்கூர் மற்றும் கோலாம்பூரில் தடுப்பூசி பெற வந்த சிலருக்கு கோவிட்-19 தடுப்பு மருந்துகள் இன்றி சிரிஞ்ச் எனப்படும் ஊசி மட்டும் செலுத்தப்பட்டதாக செய்யப்பட்ட புகார்கள் தொடர்பில் கோவிட்-19 தடுப்பூசி திட்ட பணிக்குழு (சி.ஐ.டி.எஃப்.) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய போலீஸ் மற்றும் ஆயுதப்படைகளின் ஒத்துழைப்புடன் இப்புகார் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பணிக்குழு அறிக்கை ஒன்றில் கூறியது.
இத்தகைய தவற்றைச் செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அவர்களின் சேவையும் ரத்து செய்யப்படும் என அது எச்சரித்தது.
தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய தடுப்பூசி பெறுவோர் ஊசி செலுத்தப்படுவதற்கு முன்னரும் செலுத்தப்பட்ட பின்னரும் சிரிஞ்ச்சை சோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி செலுத்துவதற்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளின்படி தடுப்பூசி செலுத்துவோர் மருந்து அடங்கிய சிரிஞ்ச் ஊசியை சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டியப் பின்னரே அதனை செலுத்த வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது.
மலேசிய ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்பட்ட சுங்கை பட்டாணி விமானப்படைத் முகாமில் இத்தகைய சம்பவம் ஒன்று கடந்த வாரம் சனிக்கிழமை புகார் செய்யப்பட்டது.
அந்த முகாமில் உள்ள மருத்துவமனையின் பணியாளர்கள் அங்கு தடுப்பூசி செலுத்து பணியை மேற்கொண்டனர்.
இதே போன்ற மேலும் இரு சம்பவங்கள் கோலாலம்பூர், அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திலும் பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்திலும் நிகழ்ந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. இப்புகார்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


