HEALTH

தாமான் சமுத்ரா தீமோர்  குடியிருப்பாளர்களுக்கு 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

20 ஜூலை 2021, 5:24 AM
தாமான் சமுத்ரா தீமோர்  குடியிருப்பாளர்களுக்கு 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

ஷா ஆலம், ஜூலை 20- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட கோம்பாக், தாமான் சமுத்ரா தீமோர்  மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி தடுப்பூசியைப் பெறுவர்.

அங்கு வசிக்கும் 3,320 பேருக்கும் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அங்குள்ள குடியிருப்பாளர்களில் சுமார் 30 பேர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். இதன் வழி தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நோய்த் தொற்று இல்லாதவர்களுக்கு இம்மாதம் 25 அல்லது 26 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த குடியிருப்பு பகுதிக்கு நேற்று வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 சோதனை நடவடிக்கைகளும் தடுப்பூசி செலுத்தும் இயக்கமும் சீராக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விரைவில் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் முயற்சிக்கு பி.கே.பி.டி. பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நல்ல பலனைத் தரும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்கு வசிப்போரில் கூடின பட்சம் மூவாயிரம் பேருக்கு நாம் தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் அவர்கள் தடுப்பூசி பெற மைசெஜாத்ராவின் அழைப்புக்கு காத்திருக்க வேண்டியதில்லை என்று. அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.