ஷா ஆலம், ஜூலை 18- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு மேலும் ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
நடப்பிலுள்ள அவசரகாலச் சூழலில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான தேவை வழக்கத்திற்கும் மாறாக மிக அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு கூடுதலாக இந்த வாகனங்கள் வழங்கப்படுவதாக மருத்துவமனையின் இயக்குநர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.
ஆம்புலன்ஸ் தேவைக்காக கிடைக்கும் அழைப்புகளின் எண்ணிக்கை எங்கள் வசமுள்ள வாகன எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
ஆம்புலன்ஸ் சேவை உடனடியாக கிடைக்காத காரணத்தால் தனது தொகுதியைச் சேர்ந்த இரு கோவிட்-19 நோயாளிகளால் கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பெற இயலாமல் போனதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவை மேற்கோள் காட்டி ஆங்கில இணைய ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது தொடர்பில் டாக்டர் ஜூல்கர்னாய்ன் இவ்வாறு கருத்துத்தார்.


