ஷா ஆலம், ஜூலை 17- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டதில் பங்கு பெற சிகிஞ்சான் தொகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி இதுவரை இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
தடுப்பூசிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் விவசாயிகள், மீனவர்கள், குடும்ப மாதர்கள், ஆசிரியர்கள், சந்தை பணியாளர்கள், கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையர் திட்ட அட்டை வைத்திருப்போரும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.
இந்த தடுப்பூசி பதிவுக்கு நாங்கள் காலக்கெடு விதிக்கவில்லை. எங்கள் வசமுள்ள 2,500 தடுப்பூசிகளுக்கான கோட்டா முடியும்வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் மாத தொடகத்தில் சுமார் 90 விழுக்காட்டு சிகிஞ்சான் தொகுதி மக்கள் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்று மாநில சட்டமன்ற சபாநாயகருமான இவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
டேவான் ஸ்ரீ செகிஞ்சானில் கூடுதலாக ஒரு தடுப்பூசி செலுத்தும் மையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்ற மாதத்தை விட தற்போது சீராக நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 5 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த தடுப்பூசி மையம் தொடக்கத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தி வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளதாக அறியப்படுகிறது என்றார் அவர்.
சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


