கோலாம்பூர், ஜூலை 16- தேசிய மீட்சி திட்டத்திற்கான (பி.பி.என்.) எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறி நடக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இம்மாதம் 14ஆம் தேதி வரை 180 தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க உத்தரவுக்கு சவால் விடும் வகையில் நடந்து கொள்ளாதீர். இது எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கையாகும்.
பொதுமக்கள் பொறுமையைக் கடைபிடிக்கும் நிலையில் இத்தரப்பினர் மட்டும் ஏன் தன்மூப்பாக நடந்து நோய்ப் பரவலுக்கு காரணமாக விளங்குகின்றனர் என அவர் கேள்வியெழுப்பினார்.
பேராசை கொண்ட தரப்பினர் குறித்த தகவல்களை அடிக்கடி அம்பலப்படுத்தி வரும் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்களின் செயலை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


