ஷா ஆலம், ஜூலை 15- கிள்ளான், தாமான் அண்டாலாஸ் உள் விளையாட்டரங்கில் செயல்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தின் (சி.ஏ.சி.) வாயிலாக அருகிலுள் குடியிருப்போருக்கு காற்றின் வழி நோய்த தொற்று பரவும் அபாயம் மிகக் குறைவு என கூறப்பட்டுள்ளது.
வீடுகளுக்கும் அரங்கிற்கும் இடையிலான குறைந்த பட்ச இடைவெளி இரண்டு மீட்டருக்கும் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டிய கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம், நோயாளிகள் கட்டிடத்திற்கு வெளியே வரிசையில் நிற்பது மற்றும் நல்ல காற்றோட்ட வசதி ஆகிய காரணங்களால் நோய்த் தொற்று அபாயம் அங்கு குறைந்து காணப்படுகிறது எனத் தெரிவித்தது.
இந்த விளையாட்டரங்கம் கிள்ளான் மருத்துவமனைக்கு அருகில் அதாவது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட கோவிட்-19 நோயாளிகளை உடடினயாக மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்வது எளிதாக இருக்கும் எனக் கருதி இந்த இந்த இடத்தை சி.ஏ.சி. மையமாக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டதாக அது கூறியது.
மேலும், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் விளையாட்டரங்கம் அளவில் பெரியதாகவும் பதிவு, மருத்துவ சோதனை, நோயாளிகளுக்கான வில்லைகளை அகற்றும் இடம், கண்காணிப்பு சோதனைக்கான படுக்கை போன்ற வசதிகளை ஏற்படுத்துவதற்கு உகந்த இடமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தங்கள் குடியிருப்பு பகுதியில் நோய்த் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக இங்கு சி.ஏ.சி. மையம் அமைப்பதற்கு சுற்றுவட்டார மக்கள் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


