ஷா ஆலம், ஜூலை 16- இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற சுகாதாரப் பணியாளர்களில் மிககுறைவானோருக்கே கோவிட்-19 மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனினும், ஐந்தாம் கட்ட பாதிப்பை யாரும் எதிர்நோக்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் இம்மாதம் 14 ஆம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 345,932 சுகாதாரப் பணியாளர்களில் 3,106 பேர் அதாவது 1.26 விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கு ஆளானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அவர்களில் 0.1 விழுக்காட்டினர் மூன்றாம் கட்ட பாதிப்புக்கும் 0.1 விழுக்காட்டினர் நான்காம் கட்ட பாதிப்புக்கும் ஆளானதாக அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றப் பின்னர் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறித்து நான் முன்பு குறிப்பிடும் போதெல்லாம் பொதுமக்கள் அதனை அதிருப்தியான கண்ணோட்டத்தில் பார்த்தனர்.
தடுப்பூசியைப் பெற்ற போதிலும் நோய்த் தொற்று பீடிக்கும் என்பது உண்மைதான். எனினும் நோயின் தாக்கம் கடுமையாக இருக்காது என்பதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லாது என்றார் அவர்.
தடுப்பூசி மீது நம்பிக்கை கொள்ளுங்கள். தரவுகளையும் நம்புங்கள். முழுமையாக தடுப்பூசி பெற்றப் பின்னர் நாம் கோவிட்-19 நோயை நெருங்க முடியும் என்றும் அவர் சொன்னார்.


