கோலாலம்பூர், ஜூலை 16- உலகில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்படும் நாடுகள் பட்டியலில் மலேசியா முதலிடம் வகிக்கிறது. தினசரி சராசரி 400,000 என்ற எண்ணிக்கையில் நாடு தடுப்பூசியை செலுத்தி வருகிறது.
அளவில் மலேசியாவுக்கு இணையான அல்லது அதை விட பெரிய நாடுகளுடன் இந்த ஒப்பீடு அமைந்துள்ளது. சிட்னி மோர்னிங் ஹெரால்டு இணைய சஞ்சிகை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
3 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் கோவிட்-19 பெருந்தொற்றினால் மரண எண்ணிக்கை அதிகரித்து மனோதிடத்தை குறைந்துள்ள நிலையிலும் தடுப்பூசி செலுத்துவதில் காணப்படும் அதிவிரைவு போக்கு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சஞ்சிகை கூறியது.
நாட்டில் கடந் ஆறு வாரங்களாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் களைப்பும் சோர்வும் ஏற்பட்டுள்ளதோடு பொருளாதாரமும் ஆட்டங் கண்டுள்ளது என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு மாத கால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஃபைசர் தடுப்பூசியின் 70 விழுக்காட்டு விநியோகத்தை மலேசியா பெறவுள்ளதாக தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தி சிட்னி மோர்னிங் ஹெரால்டு மற்றும் தி ஏஜ் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.


