ஷா ஆலம், ஜூலை 15- வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மேலும் 7,000 சுய பரிசோதனை உபகரணங்களை சிலாங்கூர் அரசு மாநிலம் முழுவதும் உள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்கு (சி.ஏ.சி.) வழங்கவுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள சி.ஏ,சி. மையங்களுக்கு குறிப்பாக அதிக எண்ணிக்கையிலானோர் சோதனை மேற்கொள்ளும் மையங்களுக்கு இந்த கருவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகள் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சுயமாக சோதிக்க உதவும் ஆக்சிமீட்டர் கருவியும் அந்த உபகரணங்களில் உள்ளடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தனிமைப்படுத்தும் காலம் முடிந்து தங்கள் மணிக்கட்டில் கட்டப்பட்ட இளஞ்சிவப்பு வில்லைகள் அகற்றப்பட்ட நோயாளிகள் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அந்த உபகரணங்களை சி.ஏ.சி. மையத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் தங்கள் உடல் நிலை குறித்த நிலவரங்களை செலங்கா செயலியில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் நிலையை மருத்துவர் கண்டறிந்து அவரின் உடல் நிலையை தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய இது உதவும் என்றார் அவர்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு வீட்டிலேயே மரணம் சம்பவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த சுய பரிசோதனை முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


