ஷா ஆலம், ஜூலை 15- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உற்பத்தி மற்றும் தொழில்துறையினருக்கு செலுத்தப்படுவதற்கு ஏதுவாக மேலும் பத்து லட்சம் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மத்திய அரசின் தொழில் துறைக்கான பிக்காஸ் திட்டம் மற்றும் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் ஆகியவற்றின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த கூடுதல் தடுப்பூசி விநியோகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினை தாம் நேற்று தொடர்பு கொண்ட போது கூடுதலாக பத்து லட்சம் தடுப்பூசிகளை வழங்க அவர் ஒப்புக் கொண்டதாக அமிருடின் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளைக் கொண்டு ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும் என்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
இம்மாதம் 13 ஆம் தேதி வரை 21 லட்சத்து 87 ஆயிரத்து டோஸ் தடுப்பூசிகள் சிலாங்கூர் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் வசிக்கும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 46 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்றுள்ளதை இது காட்டுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கையும் 11.45 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.


