ஷா ஆலம், ஜூலை 15- இன்று வரை 12 விழுக்காட்டு சிலாங்கூர்வாசிகள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி இயக்கத்தின் வாயிலாக மட்டும் நேற்று 114,416 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இதுதவிர, சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான தடுப்பூசித் திட்டத்தில் ஏறக்குறை 58,000 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இன்று வரை சிலாங்கூர் மக்களுக்கு 23 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் அதிகமானோர் தடுப்பூசி பெற்ற மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்றார் அவர்.
கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழு வழங்கிய தடுப்பூசியில் 78 விழுக்காட்டு பயன்பாட்டை சிலாங்கூர் நிறைவு செய்து விட்டதாகவும் அமிருடின் கூறினார்.
எஞ்சியிருக்கும் 618,000 தடுப்பூசிகள் தினசரி 115,000 என்ற அடிப்படையில் அடுத்த ஒரு வார காலத்திற்கு பொதுமக்களுக்குச் செலுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


