ஷா ஆலம், ஜூலை 15- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் தொழிற்சாலைகளில் கோவிட்-19 தடுப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை மையங்களில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பு மட்டுமே ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி தொடங்கி சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓப்ஸ் பாத்தோ நடவடிக்கையில் இந்த பணி பகிர்வு தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நாட்டில் 342வது சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் தொழிற்சாலைகளின் வர்த்தக லைசென்ஸ் பறிமுதல் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட எந்த அதிகாரமும் மாநில அரசுக்கு கிடையாது என்றார் அவர்.
தொழில் துறைகளை சோதனையிடும் மற்றும் கண்காணிக்கும் அதிகாரம் போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் மற்றும் 342வது சட்டம் ஆகியவற்றில் உள்ள விரிவான அதிகாரங்கள் காரணமாக ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன என்று அவர் ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, ஊராட்சி மன்றங்களில் உள்ள அமலாக்க அதிகாரிகளின் குறைவான எண்ணிக்கை மாநிலம் முழுவதும் உள்ள ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை கண்காணிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியள்ளதாகவும் அவர் அமிருடின் கூறினார்.
ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் சராசரி இண்டாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளன. அவர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே அமலாக்கப் பிரிவில் உள்ளனர். ஆகவே, தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்பு பணிகளை விரிவான அளவில் மேற்கொள்வது சாத்தியமற்றதாக உள்ளது என்றார் அவர்.


