ஆகஸ்டு தொடக்கத்தில் தேசிய மீட்சித் திட்ட இரண்டாம் நிலைக்கு நாடு முழுமையாக மாறும் சாத்தியம் உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் மேம்பாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்படுவதாக அவர் சொன்னார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் ஒன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு மாறுவதற்கு பத்து விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமயாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி நாடு சரியான தடத்தில் பயணிப்பதை இந்த ஆகக்கடைசி நிலவரம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை மாத இறுதிக்குள் பத்து விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தும் இலக்குக்கு ஏற்ப தடுப்பூசி இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளது என்றார் அவர்.
இந்த சாதகமான நிலை தொடர்ந்து நீடித்தால் மற்ற மாநிலங்களைப் போல் சிலாங்கூரும் வரும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் இரண்டாம் நிலைக்க மாறும் வாய்ப்பு உள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்று 11.8 விழுக்காட்டை தாண்டி விட்டதை தரவுகள் காட்டுகின்றன.


