ஷா ஆலம், ஜூலை 14- பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினின் வருகையையொட்டி கிள்ளான் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பரிவு “காலி செய்யப்பட்டதாக“ கூறப்படுவதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
பிரதமரின் வருகையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் நிறைந்து காணப்பட்டதோடு 177 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருந்ததாக மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜூல்கர்னாய்ன் முகமது ராவி கூறினார்.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில்களின் பயன்பாடு 150 முதல் 180 வரை உள்ளது என்று அவர் சொன்னார்.
அவசரகால நடவடிக்கையாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏ.சி.சி. எனப்படும் தினசரி சிகிச்சை மையத்தை கோவிட்-19 நோயாளிகளுக்கான வார்டாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


