ஷா ஆலம், ஜூலை 13- இங்குள்ள மெலாவத்தி அரங்கில் செயல்படும் கோவிட்-19 மதிப்பீட்டு மையத்தில் (சி.ஏ.சி.) நெரிசலைத் தவிர்க்க அருகிலுள்ள வேறு மதிப்பீட்டு மையங்களை நாடும்படி பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஆலோசனை கூறியுள்ளார்.
சிலாங்கூரில் மேலும் 12 சி.ஏ.சி. மையங்கள் செயல்படுவதாக தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கிள்ளான் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் தலா ஒரு மையமும் கோம்பாக் மாவட்டத்தில் 10 மையங்களும் செயல்படுகின்றன என்றார் அவர்.
கிள்ளான் மாவட்ட சி.ஏ.சி. மையம் தாமான் அண்டாலஸ் விளையாட்டு மையத்திலும் உலு சிலாங்கூர் சி.ஏ.சி. மையம் உலுயாம் லாமா, கிளினிக் டேசாவிலும் செயல்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோம்பாக் மாவட்டத்தைப் பொறுத்த வரை குவாங், பத்து 8, ஏயு2, உலு கிளாங், தாமான் ஏசான், பத்து ஆராங், சுங்கை பூலோ, செலாயாங் பாரு, ரவாங், கோம்பாக் செத்தியா ஆகிய இடங்களில் உள்ள சுகாதார மையங்களில் இந்த சி.ஏ.சி. மையங்கள் செயல்படுகின்றன.


