ஷா ஆலம், ஜூலை 13- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இம்மாதம் 11 ஆம் தேதி வரை 52,374 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
தொழில் துறையினருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 75.8 விழுக்காட்டினர் அதாவது 39,681 பேரும் பொது மக்களுக்கான சமூக தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 12,693 பேரும் (24.2%) தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இவர்கள் அனைவரும் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
வேலையிடங்களிலும் தொழிற்சாலைகளிலும் கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக சிலாங்கூர் அரசு தொழில்துறையினருக்கான செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் 20 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது.
அதே சமயம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், சிறு வியாபாரிகளை இலக்காக கொண்ட சமூகத்திற்கான செல்வேக்ஸ் திட்டத்திற்காக 500,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன் பெறுவர்.
செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 1-800-22-6600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது visit vax.selangkah.my. என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.


