ஷா ஆலம், ஜூலை 13- தடுப்பூசி மையத்தின் பணியாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இங்குள்ள ஐடியல் மாநாட்டு மையத்தில் (ஐ.டி.சி.சி.) செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையம் இன்று மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் நேற்று இரவு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பு பணிகளுக்காக அந்த மையம் மூடப்படுவதாக சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு கூறியது.
கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இம்மாதம் 12 ஆம் தேதி வரை அம்மையத்திற்கு வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு நோய்க்கான அறிகுறி இருக்கும் பட்சத்தில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது.
இன்று தடுப்பூசி பெறுவதற்கு தேதி குறிப்பிப்பட்டவர்களுக்கு வேறு தேதி விரைவில் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறியது.
மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக ஐ.டி.சி.சி. தடுப்பூசி மையம் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி திறக்கப்பட்டது.


