ஷா ஆலம், ஜூலை 13- வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவதற்கு ஏதுவாக ஹாலால் வர்த்தகச் சந்தையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்படி இந்திய தொழில் முனைவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசினால் உருவாக்கப்பட்ட சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம், ஹாலால் தொழில் துறை தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
ஹாலால் என்பது முஸ்லீம்களை மட்டும் மையப்படுத்திய ஒரு அம்சமாக இருந்தாலும் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இரு சிறந்த வழிமுறையாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ஹாலால் வர்த்தகத் துறையில் இந்திய சமூகம் விரிவான அளவில் ஊடுருவ வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, சித்தம் அமைப்பின் வாயிலாக ஹாலால் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றார் அவர்.
மேலும், வர்த்தகர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள இணையம் வாயிலான வர்த்தக ஒருங்கமைப்பை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


