ஷா ஆலம், ஜூலை 13- “செல்வேக்ஸ்“ எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டதிற்கான இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கையை இம்மாதம் 19 முதல் 23 ஆம் தேதி வரை மேற்கொள்ள பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் துக் சீ இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமது தொகுதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்கான கோட்டா இன்னும் முழுமையடையாததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
பண்டமாரான் தொகுதிக்கு 2,500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பதிவு இயக்கத்தில் 750 பேர் மட்டுமே தடுப்பூசி பெறுவதற்கு பதிந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த பதிவுத் திட்டத்தில் “கிஸ்“ எனப்படும் சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்ட அட்டையைக் கொண்டிருப்போர், மீன், காய்கறி போன்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர், மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பாளர்கள், கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இஸ்லாம் அல்லாத சமய வழிபாட்டுத் தல பொறுப்பாளர்கள், பொது போக்குவரத்து வாகன ஓட்டுனர்கள், அத்தியாவசிய பொருள் விநியோகத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான பதிவு முடிவடைந்தவுடன விண்ணப்பதாரர்களின் பெயர்களை நாங்கள் செல்வேக்ஸ் தரப்பினரிடம் ஒப்படைப்போம். செல்வேக்ஸ் தரப்பினர் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை தொடக்குவர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கண்ட தரப்பினர் தவிர்த்து, தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்தும் இன்னும் தேதி கிடைக்காதவர்களுக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பளிப்பது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் சொன்னார்.


