ஷா ஆலம், ஜூலை 13- அடுத்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எதிர்கொள்வதற்காக சுமார் 16,000 மாணவர்கள் eptrs.my எனும் சிலாங்கூர் மாநில அரசின் கல்வி அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் அமலில் இருக்கும் இரு கல்வித் தொகுப்புத் திட்டங்களில் பங்கேற்பதற்கு அம்மாணவர்கள் தங்களைப் பதிவு செய்துள்ளதாக டியூஷன் ராக்யாட் சிலாங்கூர் திட்ட அதிகாரி சித்தி ஷியாஸ்வானி அப்துல் லத்திப் கூறினார்.
திறன் குறைந்த மற்றும் மிதமான திறன் கொண்ட மாணவர்களை ஏ பிரிவு இலக்காக கொண்டுள்ளது. இம்மாணவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறப்பான பாடத் திட்டங்களை கொண்டு டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதே சமயம் சிரமத்தில் இருக்கும் மாணவர்களை இலக்காக கொண்ட பி பிரிவில் பாடத் திட்டங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் இவ்வாண்டில் 30,000 மாணவர்கள் வரை பங்கேற்பர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
மாணவர்கள் அடிப்படை பாடங்களில் முழு கவனத்தையும் செலுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் கூடுதல் பாடங்களை இத்திட்டத்தில் சேர்க்க தாங்கள் திட்டமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு ஆகிய பாடங்கள் இந்த கல்வித் திட்டத்தில் போதிக்கப்படுகின்றன. அதே சமயம், எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு முவேட் எனப்படும் மலேசிய பல்கலைக்கழக ஆங்கில தேர்வு மற்றும் பொது கல்வி ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.


