ஷா ஆலம், ஜூலை 12- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற தொழில்துறைகளை தற்காலிகமாக மூட சிலாங்கூர் அரசு செய்திருந்த பரிந்துரையை தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) புறக்கணித்து விட்டது.
மிகவும் அத்தியாவசியமான துறைகள் மட்டுமே செயல்பட வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பல முறை கோரிக்கை விடுத்ததை தாம் இங்கு வலியுறுத்த விரும்புவதாக வழக்கறிஞர் ஷியாரிட்ஸான் ஜோஹான் கூறினார்.
தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அமல்படுத்தப்பட வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையையும் தேசிய பாதுகாப்பு மன்றம் புறந்தள்ளிவிட்டதாக மனித உரிமை இயக்கவாதியுமான அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் நோய்த் தொற்று உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் மாநில அரசு ஊராட்சி மன்றங்களின் வாயிலாக தொழிற்சாலைகளை மூடுவதற்கான சாத்தியம் குறித்தும் அவர் கருத்துரைத்தார்.
சிலாங்கூரில் உள்ள 34 முக்கிம் எனப்படும் துணை மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த 3ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பின்னர் பல தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் ஏற்கனவே எடுத்த முடிவின்படி அத்தியாவசியமற்ற தொழில்துறைகள் தொடர்ந்து மூடப்பட வேண்டும் என்று மந்திரி புசார் வலியுறுத்தியிருந்தார்.
தொழிற்சாலைகளை மூடும் விவகாரத்தில் மாநில அரசுக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரங்கள் மட்டுமே உள்ளதால் அதனால் சுயமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஷியாரிட்ஸான் கூறினார்.


