ஷா ஆலம் ஜூலை 13,- சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் திட்டங்களுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யும்படி தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
ஆர்வம் உள்ளோர் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் அகப்பக்கம் வாயிலாக இதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று அவர் சொன்னார்.
இத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வழி முறைகள் அந்த அகப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி தொழில் முனைவோர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றார் அவர்.
சித்தம் அமைப்பின் திட்டங்களுக்காக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இக்காலக் கட்டத்தில் குறைந்தது 500 பேர் இத்திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்வர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அதிகமானோர் இந்த தொழில் முனைவோர் திட்டத்தில் பங்கேற்பேர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறிய அவர், இதன் வழி தாங்கள் சார்ந்த துறைகளில் அவர்கள் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.
நேற்று இங்கு 2021 ஆம் ஆண்டிற்கான சித்தம் பிரத்தியேக திட்டங்களுக்கு இணையம் வாயிலாக பதிவு செய்யும் திட்டத்தை கூகுள் மீட் வழி தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சித்தம் அமைப்பின் வாயிலாக தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி, திறன் மற்றும் உற்பத்தி சார்ந்த பயிற்சி, க்ரோ எனப்படும் வர்த்தக வழிகாட்டித் திட்டம், கிரான் எனப்படும் வர்த்தக உபகரண உதவித் திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தொழில் திறன் பயிற்சித் திட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ரோட்சியா சொன்னார்.
தற்போதைக்கு க்ரோ மற்றும் கிரான் ஆகிய திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். கோவிட்-19 தாக்கம் குறைந்தவுடன் தொழில் திறன் பயிற்சித் திட்டங்கள் தொடரப்படும் என்றார் அவர்.
வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்ட இந்தியர்களுக்கு வழிகாட்டிப் பயிற்சி, கடனுதவி மற்றும் வர்த்தக உபகரண உதவி வழங்கும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த சித்தம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
ஈராண்டுகளுக்கு முன்னர் தொடக்கப்பட்டது முதல் இந்த அமைப்பின் திட்டங்களில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் ஹிஜிரா சிலாங்கூர் அகப்பக்கம் வாயிலாவும் 106-951 2458 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.


