கோலாலம்பூர், ஜூலை 11- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் குறைந்து சீரான நிலையை அடையத் தொடங்கும் என்றூ சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரு கோவிட்-19 தடுப்புசி செலுத்தும் இயக்கம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்ற நடவடிக்கைகள் இந்நோய்த் தொற்று தணிவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அண்மைய சில தினங்களாக நோய்த் தொற்று அபரிமித அதிகரிப்பைக் கண்டதற்கு நாட்டில் குறிப்பாக, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகமான கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகளே காரணம் என்று அவர் சொன்னார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டாலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனைகளின் விளைவாக நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு முன்பே கணித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக நிலைமை சீரடைந்து இன்னும் ஓரிரு வாரங்களில் நோயின் தாக்கம் தணியத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அதே சமயம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தையும் நான் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
பெர்னாமா செய்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற சிறப்பு நேர்காணல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த முறை ஏற்பட்ட கோவிட்-19 இரண்டாம் அலையைப் படிப்பினையாக கொண்டு நோய்த் தொற்றுப் பரவலுக்கு காரணமாக விளஙகும் துறைகளை நாம் திறப்பதில் நாம் அவசரம் காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.


