ஷா ஆலம், ஜூலை 11- ஹைப்ரிட் எனப்படும் கலவையான முறையில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் செய்ய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாதம் 23ஆம் தேதி தொடங்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இந்த பரிந்துரை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பின்றி ஹைப்ரிட் முறையில் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு மாநில அமைப்புச் சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றக் கூட்டத்தை 10 அல்லது 11 நாட்களுக்கு நடத்தும் பட்சத்தில் அந்நோக்கத்தின் அடிப்படையில் நாம் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.
பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் அம்சங்களை சேர்ப்பது அல்லது மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் ஆராய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்களுக்கு நடைபெறுவதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மேன்மை தங்கிய சுல்தான் ஆகியோர் ஒப்பதல் அளித்துள்ளனர்.


