கிள்ளான், ஜூலை 12- இங்குள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 151 படுக்கைகளை சுகாதார அமைச்சிடமிருந்து இன்று பெறவுள்ளது.
இந்த படுக்கைகளுடன் சேர்த்து அம்மருத்துவமனையின் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு காணும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷாபிக் அப்துல்லா கூறினார்.
அந்த மருத்துவமனையில் உள்ள கோவிட்-19 நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போதுள்ள 51 படுக்கைகளின் எண்ணிக்கை விரைவில் 72 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த மருத்துவமனை கைவிடப்பட்டதைப் போல் சித்தரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அத்தியாவசிய வசதிகள் அதிகரிக்கப்பட்டன. நோயாளிகளை வார்டுகளுக்கு மாற்றுவதற்கு முன்னர் சிறிது நேரம் காக்க வைப்பது வழக்கமான நடைமுறையாகும் என்றார் அவர்.
இதனிடையே, கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தற்காலிக மருத்துவர்களின் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் முன்னதாக கூறியிருந்தது.


