ஷா ஆலம், ஜூலை 9- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 500 வெள்ளி சிறப்பு உதவித் தொகைக்கு 4,264 விண்ணப்பங்களை யாவாஸ் எனப்படும் சிலாங்கூர் மரபு மைந்தர் வாரியம் பெற்றுள்ளது.
ஜூலை மாதம் முதல் தேதி முதல் இதுவரை இந்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக யாவாஸ் தலைமை நிர்வாகி கான் பெய் நீய் கூறினார்.
இந்த திட்டத்திற்கு தாங்கள் நிர்ணயித்திருந்த 1,200 விண்ணப்பங்களையும் தாண்டி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுவதாகச் சொன்னார்.
யார் முழுமையான ஆவணங்களை முதலில் அனுப்பினார்கள் என்ற அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலோர் ஆவணங்களை முழுமையாக அனுப்ப இயலாத நிலையில் உள்ளனர் என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் இம்மாத இறுதி வரை கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தப் பின்னர் தகுதி உள்ளவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை வாரந்தோறும் நடைபெறும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அரசிடம் கூடுதல் மானியம் கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க 6 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை மந்திரி புசார் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.


