ஷா ஆலம், ஜூலை 9- நாடு முழுவதும் உள்ள உயர்கல்விக் கூடங்களில் பயிலும் சிலாங்கூரில் பிறந்த 7,200 உயர்கல்விக் கூட மாணவர்கள் மாநில அரசின் உணவு மற்றும் அத்தியாவசிய உதவிப் பொருள்களைப் பெற்றுள்ளனர்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக உயர் கல்விக்கூட தங்கும் விடுதிகளில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அம்மாணவர்களுக்கு பொருத்தமான உணவு பொருள்கள், கனிம நீர் தவிர்த்து முகக் கவசம், கிருமி நாசினி, பல் துலக்கும் பிரஷ், சவர்க்காரம் போன்ற பொருள்களும் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தற்போது அம்மாணவர்கள் நடமாட்டத் தடையை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, அவர்களின் வாழ்க்கைச் செலவினத்தை ஓரளவு குறைக்க இந்த திட்டம் துணை புரியும் என்றார் அவர்.
செர்டாங்கிலுள்ள புத்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் பட்டதாரி மாணவர் நல மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 2,700 மாணவர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் சேர்ப்பிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் பிறந்த சுமார் 7,000 உயர்கல்விக் கூட மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவி பொருள்கள் வழங்குவதற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை மந்தி புசார் கடந்த மாதம் 9ஆம் தேதி வெளியிட்டார்.


