ஷா ஆலம், ஜூலை 9- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்கு வீட்டிலிருந்து சுயமாக கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள உதவக்கூடிய ஏழாயிரம் உபகரணங்கள் வழங்கப்படும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள் தங்கள் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள இந்த கருவிகள் பெரிதும் துணை புரியும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மெலாவத்தி அரங்கில் உள்ள சுமார் ஆயிரம் ஒன்றாம் மற்றும் இரண்டாம் நிலை நோயாளிகளுக்கு ஆக்சிமீட்டர் உள்ளிட்ட சுய பரிசோதனை சாதனங்கள் அடங்கிய பெட்டிகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
மருத்துவர்கள் மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் தங்கள் உடநிலை குறித்த தகவல்களை தினசரி இரு முறை மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்க வேண்டும். என்று அவர் சொன்னார்.
இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை சோதனையிடுவதன் மூலம் நோயாளிகளின் உடல் நிலையை மதிப்பீடு செய்யும் மருத்துவர்கள், அவர்கள் தொடர்ந்து வீட்டிலியே தனிமைப்படுத்தப்படுவதா? அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதா? என்பதை முடிவு செய்வர் என்றார்.


