செர்டாங், ஜூலை 8- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட சிப்பாங் தாமான் மூர்னி குடியிருப்பாளர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது இடம் இதுவாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குட்பட்ட பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் பகுதி மக்களுக்கு இதே போன்ற தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாமான் மூர்னி பகுதியைச் சேர்ந்த 2,000 முதல் 3,000 பேர் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் அமிருடின் தெரிவித்தார்.
இதன் மூலம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த முடியும். அதே சமயம், சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இராது என்றார் அவர்.


