ஷா ஆலம், ஜூலை 8- மலேசிய விவசாய கண்காட்சி மையத்தில் (மேப்ஸ்) உள்ள நோய்த் தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கான ஒருங்கிணைந்த தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தில் (பி.கே.ஆர்.சி.) இருக்கும் கட்டில்கள் ஏறக்குறைய நிறையும் கட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
நான்காம் நிலை கோவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 154 கட்டில்கள் உள்பட அனைத்து 5,198 கட்டில்களும் பயன்பாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச அளவை தாண்டி விட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நோயாளிகளுக்கான கட்டில்கள் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டு விட்டன.
ஆகக் கடைசி நிலவரப்படி பி.கே.ஆர்.சி. மையம் தினசரி சராசரியாக 800 நோயாளிகளை ஏற்றுக் கொள்கிறது. அவர்களில் 200 பேர் நான்காம் நிலை நோய்த் தாக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர் என்று அவர் சொன்னார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பி.கே.ஆர்.சி. மையத்தில் மேலும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


