ஷா ஆலம், ஜூலை 6- சிலாங்கூர் அரசுடன் கடந்தாண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒத்துழைப்பின் வழி மாநிலத்திலுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் 9,000 இலவச விநியோகச் சேவையை கிராப் மலேசியா வழங்கியுள்ளது.
ரமலான் சந்தை வியாபாரிகள் கிராப்ஃபூட் வழி இணைய வர்த்தகத்தை மேற்கொள்ள கிராப் மலேசியா உதவியுள்ளதோடு சிறு வணிகர்கள் தங்கள் பொருள்களை சந்தைப் படுத்துவதுவதற்கு ஏதுவாக கிராப்எக்ஸ்பிரஸ் திட்டத்தையும் அது விரிவுபடுத்தியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள பலதரப்பட்ட மக்கள் தங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வதில் துணை புரியும் கிராப் மலேசியா நிறுவனத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 225,000 வெள்ளி மதிப்பிலான 9,000 இலவச விநியோகச் சேவைகளை வழங்கியதன் வழி சிறு வணிகர்களுக்கு கிராப்எக்ஸ்பிரஸ் உதவியதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.
எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திற்கும் கிராப் மலேசியா நிறுவனத்திற்கும் இடையே விவேக பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கிராப் நிறுவனத்தின் இந்த பங்களிப்புக்கு பிரதியுபகாரமாக சிலாங்கூர் அரசாங்கம் கணிசமான சிம் கார்டுகளை கிராப் பொருள் விநியோகிப்பாளர்களுக்கு வழங்கும். இதன் மூலம் அவர்களின் நடவடிக்கைச் செலவினத்தை குறைக்க முடியும் என்றார் அவர்.


