ஷா ஆலம், ஜூலை 7- நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து நாட்கள் அவசரகாலம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிப்பதற்கு போதுமானது அல்ல என்று பக்கத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) கூறியுள்ளது.
விவாதங்களைத் தவிர்த்து தேசிய மீட்சித் திட்டம் தொடர்பில் விளக்களிப்பதற்கு மட்டும் இக்கூட்டத் தொடரைப் பயன்படுத்த அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது போல் தோன்றுகிறது என்று அக்கூட்டணியின் தலைவர் மன்றம் கூறியது.
மாட்சிமை தங்கிய மாமன்னர் வலியுறுத்தியிருந்த அவசரகாலச் சட்ட பிரகடனம், அவசரகாலச் சட்டங்கள் மற்றும் தேசிய மீட்சித் திட்டம் ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு இந்த ஐந்து நாட்கள் போதாது என தலைவர் மன்றம் கருதுகிறது.
அவசரகாலப் பிரகடனம் மற்றும் அவசரகாலச் சட்டங்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படுமே தவிர, விவாதிக்கப்படாது. இது மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருத்துக்கு முரணாக உள்ளது என்று அந்த கூட்டணி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைவர் லிம் குவான் எங் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் வரை மற்றும் ஆகஸ்டு 2 ஆம் தேதியிலும் மேலவைக் கூட்டத்தை ஆகஸ்டு 3ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கும் நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் விரைவாக கூட்டப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் வலியுறுத்திருந்தார்.


